நண்பர்கள் அனைவருக்கும் அறிநு நுண்ணோக்கியின் வணக்கங்கள்

யாருடா இது அறிநு?”, என்று சந்தேகம் எழுந்தால் என்னைப்பற்றிய (அறிநு பற்றிய) அறிமுகத்தை கீழ் உள்ள இணைப்பில் சென்று பார்த்து வாருங்கள்.

~~~~அறிநு நுண்ணோக்கி…!~~~~

சரி வாருங்கள், நமது முதல் ஆய்வை துவங்குவோம். நாம் இன்று ஆராய்ந்தறியப்போகும் ஆய்வுப்பொருளைக் குறித்து ஒரு சில வரிகள்

இது,
      நமது அன்றாட வாழ்வில் பயன்படுவது,
      நமது நேரத்தை மிச்சப்படுத்துவது,
      தரவுகளை (Data) கையாளுவதை எளிமை படுத்துகிறது.

இத்தகு விடயங்களை செய்யும் ஆற்றல் கொண்டது தான் பட்டைக்குறியீடு (Barcode).

பட்டைக்குறியீடு என்பது இப்பொழுது பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு பல வடிவங்களில் காணப்படுகிறது. வகை வகையாக பல்வேறு பயன்பாட்டுக்காக, பல்வேறு பட்டைக்குறியீட்டு வடிவங்களை மனித குலம் வடிவமைத்துள்ளது. ஆனால், நாம் இன்று காணப்போவது பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் UPC – A வகை பட்டைக்குறியீடு குறித்தே!

உங்களுக்காக UPC – A வகை பட்டைக்குறியீடு குறித்த செயல் விளக்கத்தை தரவிருப்பது SiMi என்னும் அறிநு!

UPC – A (12) என்பது Universal Product Code என்று பொருள். இந்த குறிமுறையை உருவாக்கியது UCC(Universal Code Council). இவ்வகை பட்டைக்குறியீடு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை,

   *  மனிதனால் படிக்கக்கூடிய பகுதி (man readable part),
   *  கணினியால் படிக்கக்கூடிய பகுதி (computer readable part).

barcode_crp_mrp_1

மனிதனால் படிக்கக்கூடிய பகுதி (man readable part) :

ஒரு பட்டைக்குறியீட்டை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள கருப்பு வெள்ளை பட்டைகளுக்கு கீழே அந்த குறியீடு எதை உணர்த்துகிறது என்று மனிதன் படித்தறியும் படி எண்ணால் எழுதிவிடுவார்கள். இதுதான், மனிதனால் படிக்கக்கூடிய பகுதி (man readable part).

barcode_mrp_1

கணினியால் படிக்கக்கூடிய பகுதி (computer readable part) :

பட்டைக்குறியீட்டில் மனிதனால் படிக்கக்கூடிய பகுதிக்கு மேலுள்ள கருப்பு வெள்ளை பட்டைகளே கணினியால் படிக்கக்கூடிய பகுதி (computer readable part). இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவை இரண்டுமே ஒரே விடயத்தையே உணர்த்துகின்றன. மொத்தத்தில் இக்குறியீடு பன்னிரண்டு இலக்கங்களை உணர்த்துகிறது.

barcode_crp_1

பன்னிரண்டு இலக்கங்களின் விளக்கம் :

UPC – A வகை பட்டைக்குறியீடு 12 இலக்க எண்ணை கொண்டு ஒவ்வொரு பொருளையும் அடையாளப்படுத்துகிறது.

    =>   இந்த பன்னிரண்டு இலக்கங்களும் எவ்வாறு அமைகின்றது?,
    =>  எதனை உணர்த்துகின்றன?,
என்று இப்போது பார்ப்போம்.

babarcode_explain_12_digits

 

முதல் ஆறு இலக்கங்கள் :

UPC-A பட்டைக்குறியீட்டை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள், முதலில் UCCஇடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும், Universal Code Council தனித்துவமான ஆறு இலக்க அடையாள எண்ணை வழங்கும். இதுவே, பட்டைக்குறியீட்டுல் உள்ள முதல் ஆறு இலக்கங்கள் ஆகும்.

இந்த ஆறு இலக்கங்கள், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். ஆனால், ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு உற்பத்தி பொருட்களுக்கு மாறாது.

உதாரணமாக, cokcacola மற்றும் kalimark ஆகிய இரு நிறுவனங்களின் பட்டைக்குறியீட்டில் மேற்கண்ட முதல் ஆறு இலக்கங்கள் மாறுபடும். ஆனால், kalimark நிறுவனத்தின் உப தயாரிப்புகளான bavanto, vibro… போன்ற தயாரிப்புகள் அனைத்திலும் முதல் ஆறு இலக்கங்கள் மாறாது. ஏனெனில், இந்த முதல் ஆறு இலக்கங்களானது ஒவ்வொரு நிறுவனத்தையும் அடையாளப்படுத்துகிறது.

அடுத்த ஐந்து இலக்கங்கள் :

அடுத்துள்ள ஐந்து இலக்கங்களே, ஒவ்வொரு தயாரிப்பையும் மற்றையதிடமிருந்து வேறுபடுத்துகிறது. இங்கு, தயாரிப்பு என்பதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு உதாரணத்தை பார்ப்போம்,

இமயம்என்றொரு இனிப்பு கார உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை கருதுவோம்.

இந்நிறுவனம் இலட்டு, கடலை மிட்டாய், எள் மிட்டாய், மணிகாராபூந்தி போன்ற பண்டங்களை உற்பத்தி செய்கின்றது.

இவற்றுள் கடலை மிட்டாயை மட்டும் எடுத்துக்கொண்டால்;

1 கிலோ கிராம், 1/2 கிலோ கிராம், 1/4 கிலோ கிராம் என மூன்று வகையான எடையுடைய கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைமதிப்பு உடையவை. எனவே, இந்த மூன்று பாக்கெட்டுகளும் வெவ்வேறு தயாரிப்புகள். எனில், இம்மூன்று பாக்கெட்டுகளின் பட்டைக்குறியீடுகளும் வெவ்வேறாக இருக்கவேண்டியது அவசியம். எனவே,இம்மூன்று பாக்கெட்டுகளின் ஐந்து இயக்கங்களும் வெவ்வேறாக அமையும்.

இவ்வாறு, ஒவ்வொரு தயாரிப்புக்கும் வெவ்வேறு ஐந்து இலக்கங்களை தரவேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு.

கடைசி இலக்கம் / சரிபார்ப்பு இலக்கம் :

இது பெரும்பாலும் சரிபார்ப்பு இலக்கம் (Check Digit) என்றே அறியப்படுகிறது. இது, இதற்கு முந்தைய 11 இலக்கங்களிலிருந்து தான் வருவிக்கப்படுகிறது.

check_digit

எப்படி வருவிக்கப்படுகிறது எனில்,

படி : 1

முதல் இலக்கத்திலிருந்து பதினோராவது இலக்கம் வரையுள்ள ஒற்றை இயக்கத்தில் உள்ள எண்களை மட்டும் கூட்ட வேண்டும்.

= 3+3+8+3+3+0
= 20

படி : 2

கூடுதலை 3-ஆல் பெருக்க வேண்டும்.

= 20 ×3
= 60

படி : 3

பின், இரட்டை இலக்கங்களில் உள்ள எண்களை மட்டும் கூட்ட வேண்டும்.

= 5+2+0+1+3
= 11

படி : 4

இரட்டை இலக்க கூடுதலை ஏற்கனவே 3-ஆல் பெருக்கி வந்த எண்ணுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.

= 60+11
= 71

படி : 5

தற்போது, இந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினால் அது பத்தின் மடங்காக மாறும் என கண்டுபிடிக்க வேண்டும்.

= 71+9
= 80

அந்த எண் தான் 12-வது சரிபார்ப்பு இலக்க எண் ஆகும்.

கணினி ஒவ்வொரு முறை பட்டைக்குறியீட்டை படிக்கும் போதும் இந்த கணக்கை போட்டுப்பார்த்து சரிபார்ப்பு இயக்கத்தை சரிபார்க்கும். ஒருவேளை கணினி வருவித்த சரிபார்ப்பு இலக்கமும், பட்டைக்குறியீட்டில் உள்ள சரிபார்ப்பு இலக்கமும் பொருந்தவில்லை எனில், கணினி பட்டைக்குறியீட்டை தவறாக படித்துவிட்டது என்று அர்த்தம். மீண்டும் ஒரு முறை சரியாக படிக்க வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த அனைத்து கணக்கீடுகளையும் கணினி நொடிப்பொழுதில் செய்துவிடுகிறது.

இப்படியாகப்பட்ட, 12 – இலக்கங்கள் தான் ஒரு தயாரிப்பை மற்றதிடமிருந்து வேறுபடுத்துகிறது.

உலகின் முதல் பட்டைக்குறியீட்டை பயன்படுத்திய பொருள் மெல்லுகோந்து (chewing gum) – ஜீன், 1974

கூடுதல் சிறப்பம்சங்கள் :

UPC-A பட்டைக்குறியீடானது மேலும் ஒரு தனிச்சிறப்பை கொண்டுள்ளது. அது என்னவென்றால், பட்டைக்குறியீட்டின் முதல் இலக்கத்தை வைத்து அந்த பொருள் எத்தகையது அல்லது அப்பொருளின் தன்மை அல்லது அந்த பட்டைக்குறியீட்டின் தன்மையை அறியலாம். அவை,

0, 6, 7  -> சுழி குறுக்கம் பெற்றிருக்கலாம் (Suppressed UPC – E)
1, 8, 9  ->
முன் பதிவு செய்யப்பட்டவை (reserved)
2         ->  
ஒழுங்கற்ற அல்லது சீரற்ற எடையுடைய பொருட்கள். உதாரணம் : காய்கறிகள், பழங்கள்
3         ->  
மருந்து பொருட்கள்
4         ->  
பல்பொருள் அங்காடிக்கு உள்ளே மட்டும் பயன்படுத்துவது
5         ->  
கூப்பன்கள்

சுழி குறுக்கம் உடைய பட்டைக்குறியீடு (Zero Suppressed) :

பட்டைக்குறியீட்டின் தொடக்கம் 0 அல்லது 6 அல்லது 7 என இருந்தால் அந்த பட்டைக்குறியீடு சுழி குறுக்கம் (Zero Suppressed) செய்யப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்.

நீங்கள் சில பொருட்களில் உள்ள பட்டைக்குறியீடு 12 இலக்கங்களை விட குறைவாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். இத்தகு சிறிய ரக பட்டைக்குறியீடுகள் UPC-E பட்டைக்குறியீடு என்று அறியப்படுகின்றது. இவை, 12 இலக்கங்களை 8 இலக்கங்களாக மாற்ற பயன்படும் உத்தி தான் இந்த சுழி குறுக்கம் (Zero Suppression).

உதாரணத்துடன் தொடர்வோம்,

நமது இமயம்இனிப்பு கார நிறுவனம் கடலை மிட்டாய்களை பல வடிவ பாக்கெட்டுகளில் உற்பத்தி செய்கிறது.

அதில் ஒரு வகை : ஒவ்வொரு கடலை மிட்டாயையும் தனித்தனியாக சிறிய பாக்கெட்களில் அடைத்து, நீண்ட சரங்களாக கடைகளுக்கு தருகிறது என்று கருதுவோம். எனில், ஒவ்வொரு கடலை மிட்டாய் அளவுடைய சிறிய பாக்கெட்டிலும் நிறுவனத்தின் விபரங்களுடன் பட்டைக்குறியீட்டையும் அச்சடிக்க வேண்டும். இப்படிப்பட்ட, சிறிய இடங்களில் பயன்படுத்துவதற்காகத்தான் 12 இலக்க பட்டைக்குறியீடு சுழி குறுக்க உத்தி மூலம் 8 இலக்க சிறிய பட்டைக்குறியீடாக மாற்றி கையாளப்படுகிறது. சரிரீஈஈஈ…. சுழி குறுக்கம் (Zero Suppression) என்றால் என்ன…? பார்ப்போம்,

12 இலக்கமுடைய UPC-A குறியீட்டில் உள்ள சுழிகளை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற எண்களை மட்டும் பயன்படுத்துவது தான் UPC-E பட்டைக்குறியீடு ஆகும். தனது முதல் இலக்கம் மூலம் இக்குறியீடு சுழி குறுக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கணினிக்கு உணர்த்திவிடுகிறது. எனவே, கணினி அதை புரிந்துகொண்டு தேவையான இடங்களில் சுழிகளை இட்டு மீண்டும் 12 இலக்கங்களாக மாற்றிக்கொள்ளும்.

இதன் முக்கிய நோக்கம், இடத்தை மிச்சப்படுத்துவது தான்…!

முன் பதிவு செய்யப்பட்டவை (reserved) :

1, 8, 9 என தொடக்கம் கொண்ட பட்டைக்குறியீட்டுக்கென தனியாக காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. துண்டு போட்டு இடம் பிடிக்கும் வேலை தான் இது…..! இத்தகைய தொடக்கம் கொண்ட பட்டைக்குறியீட்டை இதற்கென பணம் செலுத்தி உரிமை பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஒழுங்கற்ற அல்லது சீரற்ற எடையுடைய பொருட்கள் :

பட்டைக்குறியீட்டின் தொடக்கம் 2 என்றிருந்தால் அது ஒழுங்கற்ற எடையுடைய பொருட்களுக்கானது என்று அர்த்தம். அதாவது பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களுக்கானது.

மருத்துவ பொருட்கள் :

பட்டைக்குறியீடு, 3 என்று தொடங்கினால் அது மருந்து சம்பந்தப்பட்ட பொருள் என்று அர்த்தம்.

பல்பொருள் அங்காடிக்கு உள்ளே மட்டும் பயன்படுத்துவது :

4 என்று தொடங்கும் பட்டைக்குறியீடு இவ்வகையை சாரும். இவை, ஒரு குறிப்பிட்ட அங்காடி அல்லது நிறுவனத்துக்கு உள்ளாக மட்டும் பயன்படுத்தப்படுவது. அங்காடிக்கு வெளியே இது எந்த பொருளை குறிக்கிறது என்று அறியப்படாது.

கூப்பன்கள் (Coupons) :

பரிசு கூப்பன்கள் அல்லது போட்டி கூப்பன்கள் தற்போது பட்டைக்குறியீடாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, அனைவரும் பரவலாக கண்ட Jio SIM வாங்குவதற்கான கூப்பனைக் கூறலாம்.

இவை, தங்கள் முதல் இலக்கமாக 5ஐ கொண்டிருக்கும்.

இப்படியாக, பட்டைக்குறியீட்டின் முதல் இலக்கத்தை வைத்தே அதன் தன்மைகளை சற்று அறியமுடிகிறது…!

 

அடடேநாம் இதுவரை UPC-A பட்டைக்குறியீட்டில் உள்ள 12 இலக்க எண்களின் அர்த்தங்களை பார்த்துவிட்டோம். இனி, எப்படி இந்த 12 இலக்கங்களும் கருப்பு வெள்ளை பட்டைகளாக மாற்றப்படுகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்….

சற்று பெறுங்கள், உங்களுக்கு ஏதேனும் ஐயம் எழுகிறதா…? ஆம், இந்த 12 இலக்கங்களில் எங்கும், விலை குறிக்கப்படவில்லை. ஆனால், ஏன்?

ஏனெனில், பட்டைக்குறியீடு என்பது ஒரு தயாரிப்பை மற்றதிடமிருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்த பயன்படும் அமைப்பு மட்டுமே. அதில் விலைகுறித்த விவரங்கள் ஏதும் இருக்காது. பட்டைக்குறியீட்டின் இந்த சிறப்பம்சமே, கடையின் முதலாளி தன் விருப்பத்திற்கேற்ப விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை வழங்குகிறது.

இப்படி மட்டும் அல்லாமல், விலையும் பட்டைக்குறியீட்டில் குறிக்கப்பட்டிருந்தால் விலையை, எண்ணிய மாத்திரத்தில் மாற்றவே முடியாது. ஆடித்தள்ளுபடி, வாராந்திர தள்ளுபடி, அசத்தல் தள்ளுபடி, அதிரடி தள்ளுபடி என்றெல்லாம் விலையை மாற்றிக்கொண்டே இருக்கவும் இயலாது. மாறாக ஒவ்வொரு முறை விலையை மாற்றவேண்டுமானாலும், கட்டாயமாக புதிய பட்டைக்குறியீட்டுகளை அச்சடித்து அனைத்திலும் ஒட்டவேண்டி இருந்திருக்கும். (நல்லவேளை அந்த தலைவலி இல்லை…!)

சரிபட்டைகளின் விபரங்களை காண்போம்

பட்டைகளின் விளக்கம் :

நாம் இதுவரை மனிதனால் எளிதில் அறியக்கூடிய பட்டைகளுக்கு கீழுள்ள 12 இலக்கங்களின் விளக்கத்தை பார்த்தோம். தற்போது, இந்த 12 இலக்கங்களும் எப்படி பட்டைகளாக குறியீட்டாக்கம் செய்யப்படுகிறது என்றும், மேலும் அது குறித்த விவரங்களையும் அறிவோம்.

கணினி படிக்கும் பகுதியான இந்த பட்டைகள் அடங்கிய பகுதி கீழ்காணும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

(படத்தில் காண்க…….)

code_parts

1, 7 – காலி பகுதி (Quit zone)
2     –
தொடக்க குறியீடு (start code)
3     –
முதல் ஆறு இலக்கங்கத்திற்கான பட்டைகள் ( Bars for first six digits)
4     –
இடை குறியீடு (Middle code)
5     –
அடுத்த ஆறு இலக்கங்களுக்கான பட்டைகள் (Bars for next six digits)
6     –
முடிவு குறியீடு (End code)

பட்டைக்குறியீட்டை படிக்கும் கருவிக்கு, பட்டைக்குறியீடு தொடங்கிவிட்டது, இடை பகுதியில் உள்ளது, முழுவதும் முடிந்து விட்டது என்பனவற்றை உணர்த்த முறையே தொடக்கம் (Start), இடை (Middle), முடிவு (End) என்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.

startmidend

இந்த மூன்று குறியீடுகளும் ஒரே மாதிரியான அமைப்பை உடையது. இவற்றில் மூன்று சம அளவு அகலம் கொண்ட [கருப்பு வெள்ளை கருப்பு] பட்டைகள் இருக்கும். இந்த மூன்று பட்டைகளில் ஒரு பட்டையின் அகலம் தான் அந்த பட்டைக்குறியீட்டை பொருத்தமட்டில் ஒரு அலகு (one unit). பட்டைக்குறியீட்டை பொருத்தமட்டில் பட்டைகளின் அகலங்களை வைத்தே அது உணர்த்தும் தகவல் அறியப்படுகிறது.

இந்த மூன்று குறியீடும் [கருப்பு வெள்ளை கருப்பு] என்ற ஓரலகு அகலமுடைய மூன்று மூன்று பட்டங்களை கொண்டுள்ளது. இவை மற்ற பட்டைகளை விட சற்று கீழ், நீளம் அதிகமாக இருக்கும்.

பட்டைக்குறியீட்டில் ஒரு இலக்கம் எவ்வாறு குறிக்கப்படுகிறது :

தொடக்கம், இடை, முடிவு குறியீடுகளில் உள்ள மூன்று மூன்று [கருப்பு வெள்ளை கருப்பு] பட்டைகளில் உள்ள ஒரு கருப்பு அல்லது வெள்ளை பட்டையின் அகலமே அந்த பட்டைக்குறியீட்டின் ஒரலகு அகலம் (one unit), இதை மறந்துவிட கூடாது….! இந்த அகல மாறுபாட்டை வைத்தே ஒரு எண் பட்டைக்குறியீடாக மாற்றப்படுகிறது.

இப்படியாக ஒரு இலக்க எண்ணை குறிக்க, ஏழு அலகு (seven units) அகலம் தேவை. இந்த ஏழு அலகு அகலத்தில் நான்கு கருப்பு வெள்ளை பட்டைகளின் மூலம், ஒரு எண் பட்டைக்குறியீடாக குறியீட்டாக்கம் செய்யப்படுகிறது.

பூஜ்யம் முதல் ஒன்பது வரையான பத்து எண்களுக்கான நான்கு பட்டைகளின் அகலங்களை கீழே காணலாம்.     

     0 ->  3-2-1-1
     1 ->  2-2-2-1
     2 ->  2-1-2-2
     3 ->  1-4-1-1
     4 ->  1-1-3-2
     5 ->  1-2-3-1
     6 ->  1-1-1-4
     7 ->  1-3-1-2
     8 ->  1-2-1-3
     9 ->  3-1-1-2


கவனித்தீர்களா…? மேலுள்ள நான்கு நான்கு எண்களின் கூடுதல் ஏழு என அமைவதை. ஏனெனில், ஒரு எண்ணை குறிக்க ஏழு அலகுகள் தேவை என்று முன்னமே கூறியிருந்தேன் அல்லவா….! இந்த நான்கு எண்களும், ஒரு எண்ணுக்கான நான்கு பட்டைகளின் அகலங்களை குறிக்கும். இவ்வாறு தான் பன்னிரண்டு எண்களும் பட்டைக்குறியீடாக மாற்றப்படுகிறது.

தலை, சுற்றுகிறதா…? போதும்போதும்நீங்கள் என்னை திட்டுவது எனக்கு தெரிந்துவிட்டது…! இனியும், இப்படி புரியாதபடி பேசினால், உங்களுக்கு கோபம் தாங்காமல் என்னை பல பகுதிகளாக பிரித்து வந்த இடத்திற்கே போய்விடு…”, என்று விண்ணைனோக்கி எறிந்துவிடுவீர்கள் என்று தோன்றுகிறது..! அதனால், உதாரணத்துடன் தொடர்கிறேன்….

encode_5
5என்ற எண்ணைக்குறிக்க 1-2-3-1 என்ற அகலங்களை உடைய நான்கு பட்டைகள்

 

நாம் இப்பொழுது ‘5’ என்ற எண்ணை UPC-A பட்டைக்குறியீடாக மாற்றுவோம் வாருங்கள்.

5என்ற எண்ணுக்கான குறியாக்க முறையை நாம் அறிவோம். அறிவோம் தானே…! ஆம், அறிவோம்

5என்ற எண்ணைக்குறிக்க 1-2-3-1 என்ற அகலங்களை உடைய நான்கு பட்டைகளை அடுத்தடுத்து வைக்கவேண்டும்.

 

 

// அடுத்து ஒரு சிறிய கணக்குஇங்கு யார்யார் கணக்கில் புலி, சிங்கம், சிறுத்தை…?

ஒரு UPC-A பட்டைக்குறியீட்டில் எத்தனை பட்டைகள் இருக்கும் (கருப்பு மற்றும் வெள்ளை)….?

தொடக்கம், இடை, முடிவு பட்டைகளின் எண்ணிக்கை                 = 3 ×3
= 9
ஒரு எண்ணை குறிக்க 4 பட்டைகள் எனில், 12 எண்களை குறிக்க = 12×4
= 48

                                                                                  மொத்தம் = 9+48 = 57
எனவே, UPC-A குறியீட்டில் காலி இடம் நீங்கலாக (except quite zone) 57 பட்டைகள் இருக்கும். //

ஆகா…! அவ்வளவுதான். நாம் இதுவரை,

    பட்டைக்குறியீடு என்றால் என்ன?
   அவற்றில் எண்கள் எப்படி அமைகிறது?
   அவை எவற்றை உணர்த்துகிறன?
   எண்கள் எப்படி பட்டைகளாக மாறுகின்றன?
   என ஏறத்தாழ அனைத்தையும் அறிந்துகொண்டோம்.

இனி ஒரு முழு பட்டைக்குறியீட்டை கொண்டு, அது உணர்த்தும் எண்களை கண்டுபிடிப்பதன் மூலம் நமது UPC-A பட்டைக்குறியீடு குறித்த அறிவு முழுமையடையும் என்று கருதுகிறேன்.

நமது பார்வையால் கீழுள்ள பட்டைக்குறியீட்டை வருடி (scan) விடையறிவோம் வாருங்கள்….

எxஅம்ப்லெ_சொ

பார்வை 1 :

எxஅம்ப்லெ_சொ_2

 

முதலில் சற்று காலியாக வெள்ளை நிற இடம் தெரிகிறதல்லவாஅதுதான், காலி பகுதி (Quit zone).

 

 

பார்வை 2 :
example_3.png
அடுத்ததாக 1-1-1 என்ற அளவு அகலமுடைய மூன்று பட்டைகள் (கருப்பு வெள்ளை கருப்பு) உள்ளது. இதுதான் நமக்கு பட்டைக்குறியீடு தொடங்கிவிட்டதை உணர்த்தும் தொடக்க குறியீடு (Start code)”. இது மற்ற பட்டைகளைவிட சற்று கீழே நீளமாக இருப்பதை உணர்க.

 

 

பார்வை 3 :
example_4
அடுத்து தொடர்ச்சியாக இடை குறியீடு வரை 24 பட்டைகள் உள்ளது. இவைதான், முதல் ஆறு இலக்கங்களை குறிக்கிறது என்பதை நாமறிவோம். எனவே, இவற்றை நான்கு நான்கு பட்டைகளாக பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு நான்கு பட்டையும் எந்த எண்ணை குறிக்கிறது என்று கண்டறிய வேண்டும்.

முதல் நான்கு :

example_51.png

தொடக்க குறியீடுக்கு அடுத்து,

   ஓரலகு அகல வெள்ளை பட்டை,
   ஓரலகு அகல கருப்பு பட்டை,
   ஓரலகு அகல வெள்ளை பட்டை,
   நான்கு அலகு அகலமுடைய கருப்பு பட்டை என உள்ளது. எனில், இது [1-1-1-4] என்பதை உணர்த்துகிறது.

[1-1-1-4] என்றால் 6 என்று நாம் அறிவோம். எனவே, முதல் இலக்கம் 6.

இரண்டாம் நான்கு :

example_6.png

முன்னதை தொடர்ந்து அடுத்த நான்கு பட்டைகள் ;

   ஓரலகு அகலமுடைய வெள்ளை,
   ஓரலகு அகலமுடைய கருப்பு,
   மூன்று அலகு அகலமுடைய வெள்ளை,
   இரண்டு அலகு அகலமுடைய கருப்பு என [1-1-3-2]. எனவே, இது 4ஐ குறிக்கும் குறியீடு. எனவே, இரண்டாவது இலக்கம் 4.

இவ்வாறு அடுத்தடுத்த நான்கு நான்கு பட்டைகள் குறிக்கும் எண்கள் : 3, 5, 6, 5

எனில், முதல் ஆறு இலக்கங்கள் : [ 6-4-3-5-6-5 ]

பார்வை 4 :

example_7.png

அடுத்துள்ள [கருப்பு வெள்ளை கருப்பு] [1-1-1] என்பது இடை குறியீடு (Middle code). ஆம், நாம் பட்டைக்குறியீட்டின் நடு பகுதியை அடைந்துவிட்டோம்.

பார்வை 5 :

example_8.png

இப்பகுதியும் ஆறு இலக்கங்களுக்கான பட்டைகளை கொண்டுள்ளது. இதனையும், நான்கு நான்கு பட்டைகளாக பிரித்துக்கொண்டு, அது உணர்த்தும் ஆறு இலக்கங்களையும் கண்டறிந்தால், நமக்கு கிடைப்பது : [ 5-3-3-4-7-9 ].

பார்வை 6 :

example_9

இது வழக்கம் போல் மூன்று ஓரலகு கருப்பு வெள்ளை பட்டைகள். முடிவு குறியீடு (End code) என அறிவோம். (பட்டைக்குறியீட்டுக்கும் முடிவு, நமது பட்டைக்குறியீடு குறித்த பதிவுக்கும் முடிவு நெருங்கிவிட்டது)

 

 

பார்வை 7:

example_10.png

 

இதுவும் என்னவென நாம் அறிவோம்

ஆம் காலி பகுதி (Quit zone).

 

 

 

அவ்வளவு தான்…. அவ்வளவு தானா…? ஏதோ ஒன்று குறைகிறதே….!

ம்ம்ம்ம், சரிபார்ப்பு இலக்கத்தை சரிபார்க்க வேண்டுமல்லவா…?

நாம் நம் கண்களால் வருடியறிந்த பன்னிரண்டு இலக்கங்கள்… [6-4-3-5-6-5-5-3-3-4-7-9 ].

example_11.png

ஒற்றை இலக்கங்களின் கூடுதல் :

= 6+3+6+5+3+7
= 30

3-ஆல் பெருக்க வேண்டும் :

= 30×3
= 90

இரட்டை இலக்கங்களின் கூடுதல் :

= 4+5+5+3+4
= 21

இரண்டையும் கூட்ட வேண்டும் :

= 90+21
= 111

இந்த எண்ணை எதனுடன் கூட்டினால் பத்தின் மடங்கு கிடைக்கும்…?

= 111+9
= 120 (பத்தின் மடங்கு)

எனவே, நாம் வருவித்த சரிபார்ப்பு இலக்கம் 9.
பட்டைக்குறியீட்டில் உள்ள சரிபார்ப்பு இலக்கமும் 9. ஆகையால், நாம் கண்டறிந்த 12 இலக்கங்களும் சரியானது.

இவ்வாறு தான் UPC-A வகை பட்டைக்குறியீடு செயல்படுகிறது. அடுத்து ஒரு பட்டைக்குறியீட்டை தருகிறேன். அது உணர்த்தும் 12 இலக்கங்களை கருத்து பெட்டியில் (comment box) கூறுங்கள் பார்ப்போம்

exercise
exercise

இதற்காக விடையை யாரும் தெரிவிக்காத நிலையில் ஒருவாரம் கழித்து கருத்து பெட்டியில் அறிவிக்கிறேன்.

 

இந்த பதிவு குறித்த உங்கள் பொன்னான கருத்துக்களை அறிய மிகுந்த ஆர்வமாக உள்ளேன்….

அடுத்த பதிவில் சந்திப்போம்அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் SciMi என்கிற அறிநு.

நன்றி

 

Advertisements