நதி எங்கே செல்கிறது…?

          ஆசிரியர் : பொன் குலேந்திரன் – கனடா

640px-Pärnu_jõgi_Toris

விஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடி  சென்றான். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், கட்டிங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக சிந்திக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எப்படி கவிதை போட்டியில் பங்கு கொள்வது? வீட்டில் மனைவியின் நச்சரிப்பு ஒரு பக்கம். குழந்தையின் அழுகை மறுபக்கம். வானோலியின் அலரலில் காதே செவிடாகி வீடும் போல் இருந்தது அவனுக்கு. வீட்டை விட்டு வெளிக்கிட்டு வெளியே வந்தான். இரைச்சல் அவனை துரத்திக் கொண்டிருந்தது. வீதியில் வாகனங்களின் இரைச்சல், ஓடும் இரயிலின் இரைச்சல், ஓயாமல் கதைக்கும் மனிதர்களின் இரைச்சல். கீழே தான் இரைச்சல் என்றால் வானத்தில் பறந்துகொண்டிருந்த விமானங்களின் இரைச்சல் கூட அவனை விட்டுவைக்க வில்லை.   ஓடினான் நிம்மதியைத் தேடி. தேடினான் அமைதியான இடத்தை. நடந்தான் பல மைல்கள். கடைசியாக ஒரு ஆற்றினைக் கண்டான். அமைதியாக செழித்த மரங்கள் அரவணைக்க,  மரங்களில் இருந்த குயில்களின் இனிமையான ஓசையை இரசித்தபடி கடலைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது.  மரங்களில் இருந்து விழுந்த மஞ்சள் பூகளைச் சூடியபடி கம்பீரத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.  நதியின் ஓரத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற மூங்கில் மரங்கள், குயிலின் ஓசைக்கு காற்றின் உராசலில் புல்லாங்குழல் வாசித்தன.  நதியின் இரு பக்கத்திலும் இருந்த சந்தன மரங்களின் வாசனை அவனுக்கு இதமாகயிருந்தது. தான் வசிக்கும் வீட்டின் சமையல் வாசனையும், வெளியில் வந்ததும் வீதியில் செல்லும் வாகனங்கள் கக்கும் வாயுக்களின்; பரிசுத்தமற்ற நச்சு கலந்த வாசனையையும் நினைக்க அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பசுந்தரையில் போய் பேனாவும் பேப்பரும் கையுமாக அமர்ந்தான். ஜில் என்ற குளிர் காற்று அவனின் கற்பனையைத் தூண்டிவிட்டது. கண்களை மூடினான். கண்முன்னே புன் சிரிப்புடன் அழகிய பெண் ஒருத்தி மஞ்சல் நிறப் புடவையுடன் நெளிந்து வருவதைக் கண்டான். அவள் கூந்தலின் சந்தன மணம் அவனை மயக்கியது.

“இங்கே தனியாக வருகிறாயே நீ யார் பெண்ணே?. உன் பெயர் என்ன?” கவிஞன் அவளைப்பார்த்துக் கேட்டான்.

“என்னை யமுனா என்பர். எனது தாய் இயற்கை. தந்தை இறைவன்.” என்றாள் அவள்.

“ஓ அப்படியா…! உனக்கு சகோதரர்கள் சகோதரிகள் இல்லையா?” கவிஞன் கேட்டான்.

“ஏன் இல்லை. சற்று திரும்பிப்பார் . இயற்கையின் படைப்புகளான மரங்கள், பறவைகள் , என்னுள் கவலையற்று துள்ளிப் பாயும்; மீன்கள், என்னில் உரிமையுடன் நீராடும் மிருகங்கள் எல்லாமே என் கூடப்பிறந்தவை.”

“நீ எங்கே ஓடுகிறாய் அவசரம் அவசரமாக ?”

“என் துணைவன் சமுத்திரனுடன் கலக்க?”

“உனக்குக்  குழந்தைகள் இல்லையா ?”

“ஏன் இல்லை. சற்று தூரம் நீ நடந்து சென்றால் நீ காணும் சிற்றாறுகள்; எல்லாமே என்னுடைய  அரவணைப்பை நாடி வரும் என் குழந்தைகள் தான். நான் குடும்பத்துடன்  என் துணைவனை நாடிச் செல்கிறேன். ஆனால்…”

“ஆனால் என்ன?. ஏதாவது பிரச்சனையா உனக்கு?” கவிஞன் விசனத்துடன் கேட்டான்.

“ஆமாம் என் ஓட்டத்தையும், அழகையும் கண்டு சில மனிதருக்கு பொறாமை வந்துவிட்டது. அதோ அந்த ஓவியனைத் தெரிகிறதா. அவன் என் அழகை அங்கம் அங்கமாக இரசித்து ஓவியம் தீட்டுகிறான். சில சினிமாக் கவிஞர்கள் என்னை வைத்து “நதியேங்கே போகிறது”, “ஓடம் நதியினிலே போன்ற”  பாடல்களை சினிமாவுக்கு எழுதி பணம் சம்பாதிக்கிறார்கள். சினிமா இயக்குனர்கள் கூட என் ஓரத்தில் நடிகர் நடிகைகளை கொஞ்சி குளாவ விட்டும், நடனமாடவிட்டும் படம் பிடித்து மக்களுக்குக் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லாரும் என் அழகை பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் அங்கே பார் என்னை தடுத்து நிறுத்த அந்த இடத்தில் அணைகட்டத் திட்டம் போடுகிறான் இன்னொருவன்.  அணையைக் கட்டத் தடையாக இருக்கும் என் கூடப்பிறந்தவர்களை அழிக்கப் போகிறானாம். இயற்கைக்கு விரோதமாக தன் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடப் போகிறானாம். அதுமட்டுமே எனது சில பிள்ளைகளின் பரிசுத்தமான மனதை அசுத்தப்படுத்திவிட்டான் மனிதன்” கவலைப்பட்டது யமுனா.

“நீ என்ன சொல்லுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. விபரமாய் தான் சொல்லேன்.” என்றான் கவிஞன்.

pollution.jpg

“தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுப் பொருட்களை என்னிலும்; என் குழந்தைகளிலும் செலுத்தி எங்களை அசுத்தமாக்குகிறான். அதானால், எங்கள் உடம்பின் நிறம் கூட மாறி வருகிறது.”

“உனக்கு மானிட இனத்தின் மேல் கோபம் போல் தெரிகிறது?”

clean-1223168_1280.png

“இல்லாமலா… அங்கே பார் என்னுள் புதைந்து கிடக்கும் இரத்தினக்கற்களையும் தங்கத்தையும் தேடி ஒருவன் எடுப்பதை. அதோ பார் ஒருவன் என் சகோதரனாகிய சந்தன மரத்தை வெட்டி எடுப்பதை. தூரத்தில் பார் என்னில் நீர் பருகும் என் சகோதரர்களான மான்களை ஒளித்து நின்று சுட மனிதன் எத்தனிப்பதை. எல்லாம் சுயநலம் தான்.”

“மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்களா?”

“இல்லை இல்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள். முதலாலித் தத்துவ கொள்கையுள்ள மனிதர்கள் தங்கள் செல்வத்தை பெருக்க நம் இயற்கை அன்னைக்கு எதிராக கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை எதிர்த்து “பச்சை” பெயருடைய அரசியல் கட்சியும்  சில மக்கள் குழுக்களும் போராடுகின்றன. பணத்துக்கு எதிரான இப்போராட்டம் வெற்றி பெறவேண்டும்.”

“அந்த மனிதர்கள் உன்னை அசுத்தப் படுத்தாவிட்டால் நீ துய்மையானவளா?”

“ஏன் இல்லை. அதோ தூரத்தில் தெரியும் மலையிலிருந்து பல மூலிகைகளைத் தழுவிக் கொண்டு ஓடிவருகிறேன். நான் என் சகோதரி கங்கையைப் போல் பரிசுத்தமானவள். பலர் என்னிடம் கையேந்தி நீர் பருகுகிறார்கள். பலர் என்னில் மூழ்கி தங்களின் வியாதிகளைக் குணப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த உதவிகளை எல்லாம் பலர் மறந்து செயல்படுகிறார்கள்.”

“சுயநலமுள்ள சில மனிதர்களின் பயங்கரவாத்துக்கு எதிராக நீ ஈடு கொடுக்கமுடியுமா?”

“என்னை அரவணைத்துச் செல்லும் பூமாதேவி என்னை கைவிடமாட்டள் என நினைக்கிறன்.”

“அது எப்படி?”

“பூகம்பம் வந்து அணையில் வெடிப்பு ஏற்பட்டால் நீர் பெருக்கில் மக்கள் அழிவர்.”

“வேறு என்ன நடக்கும்?” கவிஞன் கேட்டான்.

“இயற்கையன்னையின் கண்ணீர் என்னை  நிறப்பினால், நான் பெருக்கெடுத்து ஓடி ஊர்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பேன். இயற்கையைச் சீண்டுவதன் மூலம் எற்படும் விளைவுகளை மனிதன் உணருவதில்லை. என் ஓட்டத்தை தடுத்து நிறுத்தி என்னுள் உள்ள சக்தியை மின்சார சக்தியாக மாற்றி தொழிற்சாலைகளை இயங்க வைக்கிறான். அதே தொழிற்சாலைகள் மூலம் என்னையும் குழந்தைகளையும் அசுத்தப்படுத்துகிறான். நான் செய்த உதவியை மறந்து விடுகிறான். என்ன மானிட ஜென்மம் அப்பா …!” அழுதாள் யமுனா.

அவளின் கண்ணிர்; மழைத்துளிகளாக கவிஞன் கைகளில் பட அவன் சுயநிலைக்கு வந்தான். யமுனா அவன் பார்வையிலிருந்து விடைபெற்றாள்.

“அப்பாடா. என் கவிதைக்கு கரு கிடைத்து விட்டது” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தான் கவிஞன்.  அவனும் ஒரு சுயநலவாதியா?

… … …

 

நன்றிகள்…

படங்கள் :

=> Wikimedia Commons, commons.wikimedia.org 

=> pixabay.com

Advertisements